நேதாஜி ரோட் நினைவுகள் – XXVI–வித்தியாச மனிதர்கள்

Friends

பெரும்பாலும் ஸ்ரீரங்கத்தில் உள்ள வித்தியாசமான மனிதர்களைப் பற்றி எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் எழுதி விட்டார்.  இருந்தாலும் நேதாஜி ரோட்டில் வாழ்ந்த நாங்கள் பார்த்த, பழகிய மற்றும் எங்களைக் கவர்ந்த சில மனிதர்களைப் பற்றிக் கூறும் சிறு முயற்சி தான் இது.

10  பைசே: 10 பைசே சார் 10 பைசே சார், ஒரு 10 பைசா இருந்தாக் கொடுங்க சார், ஒரு 10 பைசா இருந்தா கொடுங்க மாமி, ப்ளீஸ் ஒரு 10 பைசா கொடுங்க சார், மாமி,  மாமா கொடுப்பார், மாமி கொடுப்பா, வெய்ட் பண்ணு என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருப்பார்.

சுமார் 5 ½ அடி உயரம். நரைத்த தலை முடி.  சவரம் செய்யாத முள் போன்ற  தாடி, வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார்.  சுமாரான சட்டை அணிந்திருப்பார்.  பைசா கேட்கும்  போது வலது கை நீண்டிருக்கும்.  இடது கைத் தலையைச் சொறிந்து கொண்டிருக்கும்.  ஒரு நாளும் 10 பைசாவுக்கும் மேல் கேட்டதில்லை.  10 பைசாவுக்கும் மேல் போட்டால் திருப்பிக் கொடுத்து விடுவார்.  வாங்க மறுத்தால் கீழே போட்டு விட்டுப் போய் விடுவார்.  நன்றாக வாழ்ந்தவர். நண்பனுக்காக 10 லட்ச ரூபாய்க்கு surety கையெழுத்துப் போட்டு ஏமாந்து போய் விட்டார் என்று கூறுவார்கள்.  1980 இல் 10 லட்ச ரூபாய்க்கு surety என்பது நம்பத் தகாதது தான்.

ஃபௌவாய்ங்க் ஃபஃபஃப பௌவாய்ங்க்: ஒல்லியான தேகம்.  6 ½ அடி உயரம்.  வாய்கு வெளியே நீண்ட பற்கள்.  அரை ட்ரௌசர்.  தொளதொளவென்று ஒரு சட்டை.  வாயில் எப்போதும் எச்சில் ஒழுகிக் கொண்டிருக்கும்.  பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது.  இரண்டு கைகளையும் எப்போதும் பஸ் ஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டிருப்பது போல் வைத்துக் கொண்டு பௌவாய்ங்க் ஃபஃபஃப பௌவாய்ங்க் என்று பஸ் ஹாரன் போல் சவுண்டு விட்டுக் கொண்டே பஸ்களின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பான்.  அவனுடைய அந்த சத்தம் பஸ் ஹாரனை மேட்ச் செய்யும்.  அவன் பஸ் ட்ரைவர்களின் செல்லப் பிள்ளை.  அவர்கள் வாங்கித் தரும் பன் தான் அவனுக்கு உணவு.  அவனுடைய நடமாட்டம் காந்தி சிலை ஸ்டாப்பில் ஆரம்பித்து ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாச நகர் பஸ் ஸ்டாப்பில் முடியும்.

ரயில்வே கேட்டில் பஸ்கள் ட்ரைனுக்காகக் காத்து நிற்கும்.  நம்ம ஃபௌவாய்ங்க் பஸ் பக்கத்தில் வந்து நிற்பான்.  ரயில்வே கேட் திறந்து பஸ்கள் ஓடத் தொடங்கும் போது நம்மாள் ஃபௌவாய்ங்க் ஃபௌவாய்ங்க் ஃபஃபஃப பௌவாய்ங்க் என்று கத்திக் கொண்டே முதல் பஸ்ஸூடன் கொஞ்ச தூரம் ஸ்ரீனிவாச நகர் பஸ் ஸ்டாப் வரை ஓடி விட்டுப் பின் திரும்பி வரும் பஸ்ஸூடன் காந்தி ஸ்டாப் வரை ஓடுவான்.  சில சமயம் எங்கள் கும்பலைப் பார்த்து சிரித்துக் கொண்டு நிற்பான்.  எங்களில் யாருக்கும் அவனுக்கு பன் வாங்கித் தரும் வசதி இல்லை.  பஸ் ட்ரைவர்கள் அத்தனை பேரும் பழக்கம் என்பதால் அவர்கள் சிரித்துக் கொண்டே பஸ்ஸை கவனமாகப் பார்த்து ஓட்டுவார்கள்.  1978 – 1984 வருடங்களில் நாங்கள் தினமும் அவனைப் பார்க்காத நாட்களே இல்லை என்று குறிப்பிடலாம்.

கடைசியாக ஃபிப்ரவரி 2010 இல் உத்தர வீதியில் கதரி கோபால்நாத் கச்சேரியில் அவனைப் பார்த்தேன்.  அதே தோற்றத்தோடு அங்கு வந்த கார் பின்னால் ஃபஃபஃப பௌவாய்ங்க் என்று கத்திக் கொண்டு போனான்.  1978இல் பார்த்த மாதிரியே இருந்தான்.  இவ்வளவு வருஷங்களில் எவ்வளவோ ஊட்டச் சத்து இருந்தும் எங்கள் தோற்றத்தில் இளமை போய் முதுமை எட்டிப் பார்க்கும் நிலையில் அவன் தோற்றத்தைப் பார்த்து அச்சரியமடைந்தேன்.

கை நீட்டிக்காரன்: சுமார் 30 வயதுத் தோற்றம்.  ஒல்லியான உருவம் தான். 5 ¾ அடி உயரம் இருப்பான்.  நெற்றியில் பெரிய சைஸில் குங்குமப் பொட்டு.  தலை முடியை எண்ணெய் வைத்து நன்றாகச் சீவியிருப்பான்.  முகம் கொஞ்சம் களையாக இருக்கும்.  ஆனால் முட்டைக் கண்கள், பயங்கரமாக முழிக்கும்.  கணுக்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிய வேஷ்டி.  சுமாரான அழுக்கில்லாத சட்டை.  வாயல் எதுவும் பேச மாட்டான். வலது கையை மட்டும் முழுக்க நீட்டிக் கொண்டு அதை மேலும் கீழும் அசைத்துப் பிச்சைக் கேட்பான்.  ஒரு மாதிரி சிரித்துக் கொண்டிருபான்.  பெண்களுக்கெல்லாம் அவனைப் பார்த்தால் பயம்.  காசு கேட்டுக் கொண்டு அவர்கள் பின்னாலேயே போவான்.  திடீரென்று முன்னால் வந்து கையை நீட்டுவான்.  தூக்கி வாரிப் போடும்.  அவனுடைய திருட்டு முழியால் எல்லாருக்கும் பயம்.  இதற்கெனவே அவன் தலைத் தெரு முனையில் தென்பட்டால் 5 காசோ 10 காசோ தயாராக பிச்சைக்கு வைத்திருப்பார்கள்.  அவனைக் கண்டு தான் எல்லாருக்கும் பயமே தவிர அவன் யாரையாவது ஏதாவது செய்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இவனுடைய வாசஸ்தலம் பெரும்பாலும் ரெங்க நகர் தான்.  விடுவிடுவென்று நடப்பான்.  மற்றவர்கள் மாதிரி இல்லாமல் காசு மட்டும் தான் வாங்கிக் கொள்வான்.  மற்றத் தின்பண்டங்கள் கொடுத்தால் வாங்க மாட்டான், நகர்ந்து போய்விடுவான்.

வினாச காலே விபரீத புத்தி: இவர் ஒரு வித்தியாசமான பிச்சைக்காரர்.  வயது 65 க்கு மேல் இருக்கும்.  பஞ்சகச்சம் கட்டிக் கொண்டிருப்பார். மஞ்சள் கலர் ‘ராம ராம’ பொறித்தத் துணியைத் தலைப்பாகையாகக் கட்டியிருப்பார்.  நெற்றி முழுவதும் வீபூதிப் பட்டை.  நடுவில் சந்தனம் மற்றும் குங்குமப் பொட்டு.  வலது கையில் ஜோல்னாப் பை மாட்டியிருக்கும்.  பெரிய சொம்பை இரண்டு கைகளாலும் பற்றியிருப்பார்.  சமஸ்குதத்தில் ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே வருவார்.  இடை இடையே ‘வினாச காலே விபரீத புத்தி’, மழை எப்படிப் பெய்யும்’ என்பார்.  அரிசி, பருப்பு ஆகியவற்றை வாங்கிக் கொள்வார்.  அரிசியை அவர் கொண்டு வரும் சொம்பில் போட வேண்டு.  போட்டவுடன் அதிலிருந்து கொஞ்சம் அரிசி மணிகளை எடுத்து நம் பாத்திரத்திலும் மற்றும் நம் தலையிலும் அட்சதையாகப் போடுவார்.  ரொம்பவும் மரியாதையுடன் போட்டால் தான் வாங்கிக் கொள்வார்.  இல்லாவிட்டால் போய் விடுவார்.  சும்மா போக மாட்டார், பயங்கரமாகத் திட்டுவார்.  இப்படி இருந்தா எப்படி நல்லது நடக்கும், மழை எப்படிப் பெய்யும் என்பார். பெரும்பாலும் என் பட்டியே அவர் பிச்சைக்கு வந்தால் அரிசி போட்டு விடுவாள்.  என்னையும் என் சித்தப்பா ரவியையும் விட மாட்டாள், அவர் வாயில் அனாவசியமாக விழுந்துடக் கூடாது என்று.

இவருக்கு அரிசி போட்டாவிட்டால் எப்படி மழை பெய்யாமல் போகும் என்று பாட்டியைக் கேட்பேன்.  பாட்டி ‘போடா போக்கணாங்கெட்ட பயலே’, அவர் உலக நன்மைக்காக மழையை எதிர்பார்க்கிறார், உனக்குப் புரியாது என்பாள். 

எது எப்படியோ, அவர் திட்டுக்களில் கடைசி வார்த்தையாக ‘மழை எப்படிப் பெய்யும்’ வந்து விடும்.

காது பொத்தி கோவிந்து: பருத்த சரீரம்.  மாநிறம்.  கறுப்பான தலை முடி.  தலை வாரியும் வாரப்படாமலும் இருக்கும்.  இரண்டடிக்குப் பாறாங்கல் ஒன்று வெள்ளைக் கோபுரம் வாசலில் போடப் பட்டிருக்கும்.  அது தான் நம்ம கோவிந்துவின் வாசஸ்தலம்.  எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை தான் போட்டுக் கொண்டிருப்பான்.  வேட்டியை எப்போதும் மடித்துக் கட்டியிருப்பான்.  கோடு போட்ட பட்டா பட்டி அண்டர்வேர் வெளியில் தெரியும்.  குத்துக்காலிட்டு அந்தப் பாறாங்கல் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பான், பகல் பொழுது முழுவதும்.  இரவில் எங்கே போகிறான் என்று தெரியாது.  கைகள் இரண்டும் இரண்டு காதுகளையும் இறுக்கமாகப் பொத்திக் கொண்டிருக்கும்.  தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருப்பான்.  யாரோ அவனிடம் பேசுவது போலவும், அதைக் கண்ணும் கருத்துமாக அவன் கேட்பது போலவும் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.  சின்னப் பையன்கள் அவனைக் கோவிந்து டேய் கோவிந்து என்று கூப்பிட்டுக் கலாட்டா செய்வார்கள்.  அவர்கள் தொந்தரவு பொறுக்க முடியாமல் போகும் போது கோவிந்து தன் கைகளைக் காதுகளை விட்டு எடுத்து வேகமாக எழுந்திருப்பான், அவ்வளவு தான், பையன்கள் அலறிக் கொண்டு ஓட்டம் பிடிப்பார்கள்.   கோவிந்து காதுகளை விட்டுக் கைகளை எடுத்து விட்டான் என்றால் எதிரில் உள்ளவர்களைப் பளாரென்று அறைந்து விடுவான்.  அவன் எதிரில் நின்று ஐந்து நிமிஷம் யாராவது தொடர்ந்து பேசினால் கண்டிப்பாக அவனிடம் அறை வாங்காமல் தப்பிக்க முடியாது.

இன்றும் ஸ்ரீரங்கத்தில் வசனம் உண்டு, “யாராவது காதில் பூ சுத்தின மாதிரிப் பேசினால், டேய் உன் கதையைக் கோவிந்து கிட்டப் போய்ச் சொல்லு”.

கேணில சொம்பெடுக்கலையோ: ஒல்லியான கச்சலான உருவம்.  ஐந்து அடி உயரம் தான்.  தலை முடி எண்ணெய்ப் பார்த்துப் பல நாட்கள் ஆகியிருக்கும்.  கருமையான நிறம்.  வெத்தலைப் போட்டுப் போட்டு காவியேறின பற்கள்.  இடையில் எப்பொழுதும் அழுக்கு வேட்டி தான்.  சட்டை கிடையாது.  கழுத்தைச் சுற்றி கெட்டியான தாம்புக் கயிற்றை மாலை போல் தொங்க விட்டிருப்பான்.  தாம்புக் கயிற்றின் ஒரு முனையில் பாதாளக் கரண்டி முடிச்சுப் போடப்பட்டிருக்கும்.  ஆனால் இத்தனை சிறிய உருவத்துக்கு நல்ல வளமான குரல்.  கேணில சொம்பெடுக்கலையோ, கேணில தூறெடுக்கலையோ,  கேணில சொம்பெடுக்கலையோ, கேணில தூறெடுக்கலையோ என்று குரலிட்டுக் கொண்டுத் தெருத்தெருவாகப் போவார். 

கேணில சொம்பெடுக்கலையோ உச்சஸ்தாயில் ஆரம்பித்து கேணில தூறெடுக்கலையோ கீழ் ஸ்தாயில் முடியும்.  பெரும்பாலும் சித்திரை உத்தரை வீதிகளில் தான் இவரைப் பார்க்க முடியும்.  மாதத்தில் ஒரு நாள் நேதாஜி ரோடிலும் அவர் குரல் கேட்கும்.  அந்தக் காலக் கட்டங்களில் (70 களில்) ஸ்ரீரங்கத்தில் எல்லா வீதிகளிலும் கிணறு தான். பைப்புக் குழாயெல்லாம் பின்னாட்களில் தான்.  தினமும் யாராவது ஒருவர் வீட்டில் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும் போது கிணற்று மேடையில் உள்ள ஏதாவது பொருட்கள் கட்டாயம் கிணற்றில் விழுந்தே தான் தீரும்.  நம்மாள் தான் ஆபத்பாந்தவன்.  சின்னச் சின்னப் பொருட்களை பாதாளக் கரண்டியால் (கப்பல் நங்கூரத்தின் சின்ன நகல்) சுலபமாக எடுத்து விடுவார்.  பொருளோட மதிப்பை விடக் கூலி ரொம்ப வாங்கறயே என்று மாமிகள் எப்போதும் கூற்வார்கள்.  இவர் சிரித்துக் கொண்டே இருப்பார்.

வெயில் காலத்துக்குப் பின்னால் கிணற்றைத் தூர் வாரும் வழக்கம் உண்டு.  வெயில் காலத்தில் கிணற்றில் மணல் சேர்ந்து விடும்.  மழைக் காலத்துக்கு முன்னால் தூர் வாரி விட்டால் தண்ணீர் நன்றாக ஊற ஆரம்பித்து விடும்.

அந்த சமயங்களில் தான் கேணில சொம்பெடுக்கலையோக்கு நல்ல டிமண்ட்.  ராட்டினக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் மெல்ல உறை உறையாக இறங்குவார்.  தண்ணீர் மட்டம் வந்ததும் ராட்டினக் கயிற்றை இடுப்பில் சுற்றிக் கொள்வார்.  தண்ணீருக்குள் முங்குவார்.  கிணற்றில் வாளியை விட வேண்டும்.  அவர் முங்கி முங்கி மணலை அள்ளி அள்ளி வாளியில் போடுவார்.  மணல் மட்டுமல்ல காணாமல் போன பொருட்களையும் மீட்டுத் தருவார். என்ன தான் கூலிக்கு மராத்தான் பேச்சு வார்த்தை நடந்தாலும், எனக்குத் தெரிந்து கூலியைத் தவிர்த்து ஒவ்வொரு வீட்டிலும் தவறாமல் அவருக்கு சாப்பாடு போட்டுத் தான் அனுப்புவார்கள்.

கிணறு போய், ஏன் தனி வீடுகளே இல்லாமல் எல்லாம் அப்பார்ட்மெண்ட்டுகளாக உறுமாறியிருக்கும் இந்தக் காலத்தில், போன வாரம் உத்திரை வீதியில் உள்ள என் மாமனார் வீட்டில் நன்றாகச் சாப்பிட்டு விட்டு அரைத் தூக்கத்தில் இருந்த போது கேணில சொம்பெடுக்கலையோ, கேணில தூறெடுக்கலையோ என்று குரல் கேட்ட மாதிரி இருந்தது.  சோம்பல் முறித்தபடி ஆர்வக் கோளாறால் வாசலில் போய்ப் பார்த்தேன், அதே கச்சலான உருவம் தான் வீதி முனையில் போய்க்கொண்டிருந்தது.

3 Replies to “நேதாஜி ரோட் நினைவுகள் – XXVI–வித்தியாச மனிதர்கள்

 1. Superb read Sudharsanam. நாலரை அடி உயரத்தில் இடது கை போலியோவுடன், தோள்களில் சணல் கயிறும் மண் சட்டியும் தொங்க, அபர கிரமத்துக்கு ஏற்பாடு செய்ய ஒருவர் வருவாரே… Always wondered the deft efficiency with just one hand, அதுவும் வாத்தியார், மோட்டார் மவுத் மாமாக்களின் ஏச்சுக்கு நடுவே. Respect.

  ஆறுல நாலு ஞாபகம் இருக்கு

 2. எனக்கு மூன்று நபர்களை நினைவில் கொண்டு வர முடிகிறது. 1 2 and last.
  As usual Nice

 3. எனக்கு இவர்கள் ஆறு பேரையும் பார்த்த ஞாபகம் இருக்கு.

  கோவிந்துவுக்கு ஒட்டி வெட்டின முடி. குத்திண்டு நிக்கும்.

  கை நீட்டி க்கு செம கூர்மையா நகம் இருக்கும்.
  அவன் பெண்கள் மட்டும் இருந்தால் வேட்டியை தூக்குவான் என்பதாலேயே பயம்.

  கேணில ஸொம்பெ….. ராகம்…
  அடுத்த லைன் கீழ் ஸ்தாயியில் கேணில……. ராகம்.

  உத்து கேட்டு நாமதான் ஃபில் இன் தி ப்ளேன்க் பண்ணிக்கணும்.

  அந்த உஞ்சவிருத்தி மாமாவுடன் சில சமயம் ஒரு சின்ன பெண்ணோ இல்லை அவர் மனைவியோ கூட வருவதுண்டு.

  ஸ்ரீகாந்த் சொன்ன அந்த சிறு உருவம் எனக்கு நன்கு ஞாபகம் இருக்கு.
  மும்பையில் என் நண்பர்களின் குடும்ப அபர காரியத்தின் போது நாந்தான் அந்த காரியம் செய்வேன்.
  ஒவ்வொரு முறையும் அவனை நினைத்து கொள்வேன்.

  கடைசியாக கட்டியது சித்தப்பா பையன் ரகு மாமியாருக்கு.

  ரொம்ப கேஷுவலாக எழுதியிருக்கிறாய். சூப்பர் 😀

Leave a Reply to R SURESH Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)