நேதாஜி ரோட் நினைவுகள் – XXIII – விளையாட்டுக்கள்

Friends

யோசித்துப் பார்த்தால் நேதாஜி ரோட்டில் நாங்கள் க்ரிக்கெட்டைத் தவிர வேற விளையாட்டுக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஒவ்வொரு சீசனுக்கும் அதற்கு தகுந்தாற் போல் விளையாட்டுக்கள் விளையாடி இருக்கிறோம். ஆனாலும் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு நாளும் கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததில்லை. தகுந்த காரணம் என்று பார்த்தால் எங்களில் ஒரு சிலருக்கே எல்லா விளையாட்டுக்களிலும் விளையாட ஆர்வம் இருந்தது. க்ரிக்கெட் மட்டும் பொதுவான விளையாட்டாக இருந்தது.

க்ரிக்கெட்டுக்கு அடுத்தபடி கேரம் போர்டு நிறைய ஆடியிருக்கிறோம். வெயில் நேரத்தில் ஆடத் தகுந்த விளையாட்டு அது. அதில் திறமையானவர்கள் சாம்பு, ஆர்.சுரேஷ். சிவசங்கருக்கு ஆர்.சுரேஷை விட தான் நல்ல ப்ளேயர் என்று எப்போதும் நினைப்பு. அது உண்மை கிடையாது.

Photo Courtesy Youtube

சாம்பு ஸ்டெடி ப்ளேயர். concentration ரொம்ப ஜாஸ்தி. அவன் ஒரு சிறிய purse வைத்திருப்பான். அதற்குள் ஒரு ivory stricker இருக்கும்.  அந்தக் காலத்தில் தந்த ஸ்ட்ரைக்கருக்குத் தடை இல்லை.  அதைத் துடைக்க தனியாக ஒரு சிறிய துணி (கண்ணாடி துடைப்பதற்கான துணி) வைத்திருப்பான். அவன் எப்போதும் அவனுடைய தனி ஸ்ட்ரைக்கரில் தான் ஆடுவான். நாங்களெல்லாம் தெருவில் ஆடும் போதே அவன் ஸ்ரீரங்கம் க்ளப்பில் கேரம் போர்டு ஆடியிருக்கிறான். பிரமாதமான player.

ஆர். சுரேஷும் equally talented player. சாம்புக்கு ஈடு கொடுத்து அவன் ஒருத்தனால் மட்டும் தான் ஆட முடியும். இரண்டு பேரும் சரிசமம் என்று சொல்லலாம்.  நேதாஜி தெருவைப் பொறுத்த வரை ஆர்.சுரேஷ் தான் நம்பர் 1. பின்னாட்களில் LICயில் ஆடத் தொடங்கியதிலிருந்து அவன் மிகப் பெரிய player ஆகி விட்டான். Level லே தனியாகப் போய்விட்டது. தெருவில் அவனை singlesஇல் யாரும் ஜெயித்தது கிடையாது.

Doublesஇல் தான் தோற்றுப் போவான், அதிலும் எதிர்கட்சியில் வலுவான ஆட்கள் வேண்டும்.  இதில் ஸ்ரீதரின் சதி உண்டு.  என்னையும் சங்கரனையும் ஒரு டீமில் போட்டு எதிரில் சுரேஷுக்கு  குமார் தங்கத்தைப் பார்ட்னராகச் சேர்த்து விடுவான்.  சுரேஷும் அண்ணனை எதிர்த்துப் பேச மாட்டான்.  புராண கால லக்ஷ்மணனை விட சுரேஷ் மேலானவன், என்னைப் பொறுத்தவரை.  குமார் தங்கத்தால் தோத்துப் போவான். அதிலிலும் லேசில் தோற்க மாட்டான். அபிமன்யு மாதிரி கடைசி வரைப் போராடித் தோற்பான். ஆர்.சுரேஷை singles இல் தோற்க அடிக்க முடியாத காரணத்தால் doublesஇல் ஒரு சொத்தை ஆளைப் பார்ட்னராகப் போட்டுத் தோற்க அடித்து விட்டு சுரேஷையேத் தோற்கடித்ததாக மார்தட்டிக் கொள்வான் சங்கரன்.

ஆர்.சுரேஷூக்கு வருத்தம் இருந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டான். காரணம் எங்கள் இருவரிடையே இருந்த நட்பு தான். என்னைத் தவிர வேறு யார் சங்கரனுக்குப் பார்ட்னராக வந்தாலும் ஆர்.சுரேஷைத் தோற்கடிக்க முடியாது. நானும் அந்த காலத்தில் சங்கரனுக்கும் ஸ்ரீதருக்கும் கட்டுப் பட்டு சங்கரனுக்குப் பார்ட்னராக இருந்து விடுவேன். எனக்கும் ஆர்.சுரேஷுக்கும் இருந்த நட்பின் ஆழத்தால் எங்களிடையே வேற்றுமை வந்ததில்லை.

சங்கரனும் நல்ல ப்ளேயர் தான், ஆர். சுரேஷுடன் ஒப்பிடாத வரையில். ஆட்டம் பிடித்ததென்றால் காயின்ஸ் போட்டுக் கொண்டேயிருப்பான்.

ஸ்ரீகாந்த் ஹிட் அடிப்பதில் மன்னன். குறைந்த பட்சம் ஹிட்டில் 3 காயின்கள் பாக்கெட் ஆவது உறுதி. ஸ்ரீரங்கம் க்ளப்பில் அவனுக்கு நல்ல பெயர். ‘ஏய் குண்டா ஒருத்தர் ஆடுவார் பாரு, செம ஹிட் அடிப்பார். காயின்க்ளெல்லாம் தெறித்துப் போகும்.’ ஹிட்டை விட்டால் அவன் சுமாரான ப்ளேயர் தான். என்ன காரியம் செய்தாலும் அவனைப் பற்றி எல்லோரும் பேசுமாறு செய்வதில் அவனை யாரும் மிஞ்ச முடியாது.

ராஜு நன்றாக விளையாடுவான், சங்கரனுக்கு அடுத்தபடி(இதை ராஜு ஒத்துக் கொள்ள மாட்டான்). சேர்ந்தாற்போல் 4 காயின்கள் போடும் திறமை படைத்தவன்.

பாலாவுக்கு ஆட்டம் பிடிச்சுதுனா காயின்கள் விழுந்து கொண்டே இருக்கும். வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்ப்டாதவன்.  Doubles ப்ரமாதமாக ஆடுவான்.

ஜே.சுரேஷ் காயினைப் போடும் போது பின்னாடியிலிருந்து அவனை யாராவது தாங்கிப் பிடிக்க வேண்டும். அந்த அளவு பின்னோக்கிப் பாய்வான். கேரம் போர்டு ஆட்டத்தின் முக்கியத் தேவையே steadyஆக உட்கார்ந்து விளையாடுவது தான். ஸ்டிரைக்கரில் கை வைத்தவுடன் அப்படியே பின்னோக்கி சாய்வான். எப்போ ஸ்டிரைக்கரை விடுவான் என்றிருக்கும். அதிலும் நடு விரலை மடக்கி விளையாடுவான்.

பாபுஜி @ ரமேஷ் @ ராமனுஜம் நாம் ஆடும் ஆட்டத்தைப் பார்த்துத் தான் விளையாடவே வந்தான். தொடைகளைத் தூக்கி தூக்கி அடித்துக் கொண்டேயிருப்பான். ரொம்ப உணர்ச்சி வசப் பட்டு ஆடுவான். ரொம்பவும் துடிப்பாக இருப்பான். ஜெயிப்பதில் குறியாக இருப்பான்.  ராஜூவிடம் போட்டி என்றால் இன்னும் உணர்ச்சி வசப்பட்டு ஜெயிக்கற வேகத்தோடு ஆடுவான்.  ஆனால் அவனால் ராஜுவை ஜெயிக்க முடியாது.

ஜானாவின் விசேஷமே ஒரு விரலில் ஆடுவது தான். ஒரு விரலிலேயே காயின்களைப் போடுவான். வழக்கம் போல் ஜானா ஆட்டத்தை விட மற்றவர்களை சிரிக்க வைப்பதிலேகுறியாக இருப்பான். சிரிப்பை மூட்டி மற்றவர்கள் காயின்கள் போடாமல் பார்த்துக் கொள்வான்.

Photo Courtesy Hindu Tamil

பம்பரமும் அதனுடைய சீசனில் ஆடுவதுண்டு. ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தீடிரென்று பம்பரம், கோலிக்குண்டு, கில்லி என்று சீசன் மாறும், யார் மாற்றுகிறார்கள் என்று தெரியாது. ஆனால் uniformஆக விளையாட்டுக்கள் மாறி விடும். பம்பரத்திலும் ஆர்.சுரேஷ் தான் நன்றாக விளையாடுவான். ஸ்ரீகாந்த் பம்பரக் கட்டைகளைப் பொளப்பதில் எக்ஸ்பெர்ட். கொஞ்சம் வட்டத்தை விட்டு பம்பரம் எம்பினாலும் ஆர்.சுரேஷ், ஜெ.சுரேஷ் மற்றும் நான் கேட்ச் பிடித்து விடுவோம். அபிட் எடுப்பதில் ஆர்.சுரேஷ் தான் முதல் ஆள்.

Photo Courtesy: Hindu Tamil

கிட்டிப் புள் கொஞ்ச நாட்கள் ஆடியிருக்கிறோம். ரொம்பவும் riskஆன விளையாட்டு அது. பாலா பயங்கரமாகக் கெந்துவான். ஆர்.சுரேஷ் ஒரு கண்ணை மூடிக் குறிபார்த்து தாண்டை அடித்து அவுட்டாக்கி விடுவான். கிட்டிப் புள்ளில் ஒன்று, இரண்டு, மூன்று touch அடிக்கும் போதே ஜானா பிடித்து விடுவான். கேட்ச் பிடிப்பதில் அவன் பாணியே தனி. சக் சக்கென்று கேட்ச் பிடித்து விடுவான். நிறைய பேருக்குக் காயத்தை ஏற்படுத்தியதால் கிட்டிப்புள் ஆட்டம் கை விடப்பட்டது.

வாலிபால் ஒரு காலக் கட்டத்தில் பயங்கர ஈடுபாட்டுடன் ஆடப் பட்டது. நிஜ வாலிபால் அல்ல, plastic ball. நாங்கள் 10வது படிக்கும் போது ஆடப் பட்டது. பந்து இரண்டு நாட்கள் கூடத் தாங்காது. நல்ல interesting ஆக இருக்கும். plastic பந்துக்கே இருபுறமும் தலா ஐந்து பேர் ஆடுவோம். நிதி பற்றாக்குறையால் அந்த விளையாட்டும் பத்தாவதிலேயே நின்று போனது.  ஜானா அப்போதெல்லாம் படிப்பில் ரொம்ப sincere.  Science இல் 40 one mark questions. 

ஜானா ‘வாலிபால் விளையாடற நேரத்தில ஒரு 10 questions படிச்சுடலாம்’ என்பான்,  விளையாட்டின் மேல் உள்ள ஸ்வாரஸ்யத்தால் நாங்கள் அவன் பேச்சைக் கேட்டதில்லை.

கொஞ்ச நாட்கள் shuttle badminton சின்மயா ground இல் ஆடப் பட்டது. அதிலும் தலா 5 பேர் இரண்டு புறமும் ஆடுவோம். பாண்ட்ஸ் மாமா கூட ஆடியிருக்கிறார். அந்த ஆட்டமும் பணத் தட்டுப் பாட்டினால் நின்று போனது.

காலேஜ் சமயத்தில் ஒரு நிஜ வாலிபால் கிடைத்தது. மூன்று மாதங்கள் சத்திரத்தில் நெட் கட்டி விளையாடினோம். Centreஇல் நின்று பந்தை வாங்கிப் போடுவதிலும் ஆர்.சுரேஷ் தான் கெட்டிக்காரன். ஜெசுவிற்கு பந்தை smash பண்ணுவதில் தான் விருப்பம். விருப்பம் என்று தான் சொன்னேனே தவிர அவன் பெரிய smasher என்று சொல்லவில்லை. வாலிபால் ஆட்டத்தில் எல்லோருமே அவரவர்கள் தங்களைப் பெரிய playerகளாக மனதில் வரித்திருந்தார்கள். உண்மையோ வேறு விதமானது. தவிர அந்த காலக் கட்டத்தில் காலேஜ் timeஇல் இந்த மாதிரி எண்ணங்கள் எழுவதைத் தவிர்க்க முடியாது. மேலும் யாருக்கும் அதனால் எந்த வித நஷ்டமுமில்லை.

யார் சொன்னார்கள் எங்களிடம் positive thinking இல்லை என்று? எல்லாமே positive தான். ஒரு நாள் இந்த ஆட்டமும் முடிவுக்கு வந்தது, ரகு ஜெசு போட்டி காரணமாக.  அநியாயத்துக்கு எல்லோருமே ஜெசுக்குத் தான் சப்போர்ட்.  ரகு தனி ஆள்.  ரங்க நகரிலிருந்து வந்த காரணத்தால் ரகுவிற்கு சப்போர்ட் இல்லை.  ஸ்ரீகாந்த் தான் நடுவர், என்ன தான் ஒரே தெருவிலிருந்து வந்தாலும், பெஸ்ட் ஃப்ர்ண்டாக இருந்தாலும் ஸ்ரீகாந்த் உண்மையான நடுவராக இருந்தான்.  என்ன சண்டை காரணமாக one to  one match இருவருக்கும் வந்தது என்று ஞாபகமில்லை.  போட்டி சரிசமமாகப் போனது, பல முறை சத்திரம் தகரத்தின் மேல் பந்து விழுந்து டமார் டமார் என்று பெரிய சப்தமெழுப்பியது.  கடைசி பாயிண்ட்டில் dispute.  நடுவர் கை விரித்து விட்டார்.  கடைசியில் பந்து ஆணியால் குத்டிக் கிழிக்கப்பட்டது, அத்துடன் வாலிபால் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

வாலிபால் ஆட்டத்தினால் ரொம்ப suffer ஆனது பாண்டுரெங்கன் தான் (close friend of sridhar – எலே புருஷொத்து …………. (bad words) இங்க வாடா). காரணம் பந்து டம் டம்மென்று தகரக் கொட்டகையின் மீது விழுந்து சப்தம் எழுப்பும். தகரம் உடையும் அபாயம் இல்லையென்றாலும் பாண்டுரெங்கனுக்கு அப்படித் தோன்றியது. அவர் என்ன செய்வார் பாவம், சத்திரத்தைக் காக்க வேண்டிய கடமையாச்சே?

Photo Courtesy: Wikiwand

கோலிக்குண்டு ஒரு வருடம் வரை விடாமல் ஆடப் பட்டது. அதற்கு ஆட்கள் கம்மி – ஆர்.சுரேஷ், நான், ரவி, நரசிம்மன், ஆனந்த், ராஜூ, சங்கரன், பாலா. இந்த விளையாட்டிலும் ஆர்.சுரேஷை யாரும் ஜெயிக்க முடியாது. முதலிலேயே குழிக்குள் கோலியைப் போட்டு விடுவான். அதன்பின் ஒருவரும் குழியையே எட்டிப் பார்க்க முடியாது. சொடேர் சொடேர் என்று இடது கை கட்டை விரல் மற்றும் பெரு விரலை உபயோகித்து எல்லாக் குண்டுகளையும் துரத்தி அடித்து விடுவான். இந்த விளையாட்டில் ஒரு தந்திரம் உண்டு. முதலிலேயே யார் கடைசியில் குண்டு வீசுவதென்று. ஆனந்த் தான் அதில் கில்லாடி. அண்ணா (ரவி) நான் லாஸ்ட் லாஸ்ட் என்று சொல்லி விடுவான். பெரும்பாலும் சுரேஷ் குண்டு வீசிய பின் தான் மற்றவர்கள் வீசுவார்கள். முக்கால்வாசி அவன் வீசும் குண்டு குழிக்கு மிக அருகாமையிலேயே போய் விடும். அடுத்து வீசியவன் செத்தான். சுரேஷ் அளவுக்குக் குழிக்கு அருகாமையில் ஒருவனாலும் குண்டு வீச முடியாது. முதலிலேயே குழிக்குள் குண்டைப் போட்டு அடுத்தபடி எல்லாக் குண்டுகளையும் பேர்த்து எடுத்து விடுவான். ஆர்.சுரேஷின் நல்ல பழக்கம், எந்த வித பாரபட்சமுமின்றி எல்லாக் குண்டுகளையும் சமமாக விரட்டி அடிப்பான். அவனுடைய பெருந்தன்மையான குணம் முத்லிலேயே குண்டை வீசுவது தான். ரவி காலேஜ் professor ஆக இருந்தாலும் வெட்கமின்றி கோலிக் குண்டு ஆடுவான். இந்த ஒரு விளையாட்டுத் தான் நண்டு சிண்டு முதல் பெரியவர்கள் வரை விளையாடியது.

ஆர்.எஸ்.எஸ் இன் தயவால் கபடி விளையாடினோம்.  அதற்கு முன்னால் சீனியர்ஸுடன் கபடி விளையாடியிருக்கிறோம்.  மாலி – ஜானா அத்தைப் பையனப் பிடிக்கவே முடியாது,  தாட்டியாக இருக்கும் காரணத்தால்.  ரவி ரொம்ப நேரம் தம் கட்டுவான்.  எப்படியாயினும் ஆர்.எஸ்.எஸ் இல் தான் தினமும் கபடி விளையாடினோம்.

Photo Courtesy: Behance.net

ஜி.மு இரண்டு கைகளையும் ஒரு தட்டுத் தட்டி படக்கென்று கபடி பாடி வருபவர்களைப் பிடித்து அவுட்டாக்கி விடுவான்.  அவனிடம் கால் கொடுத்து மாட்டாதவர்கள் இல்லை.  இதில் நான் மட்டும் தான் விதி விலக்கு. அவனிடம் வேண்டுமென்றே காலைக் கொடுத்து விட்டு அவன் பிடித்ததும் சரக்கென்று உருவி வந்து விடுவேன்.

பாலா முட்டி specialist.  மாடு மாதிரி முட்டியே தூக்கி விடுவான்.

சதாசிவம் கபடி specialist. ரொம்ப நேரம் தம் கட்டுவான். கபடி கபடி பாடுவது மிகவும் fast ஆக இருக்கும். இரண்டு கைகளும் முழங்கால்களுக்குக் கீழே வரும் அளவு குனிந்து கொண்டு கபடி பாடி வருவான். அவனை லேசில் பிடிக்க முடியாது. பாலா ஓடி வந்து முட்டுவான். ஜீ.மு கலை லபக்கென்று பிடிப்பான். அப்படியும் நாலைந்து பேர் சேர்ந்து அமுக்கினால் ஒரு வேளை பிடி படுவான். அவனுடைய இந்தத் திறமை ஆர்.எஸ்.எஸ்ஸில் தான் வெளிப்பட்டது .

பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது (Boys Hi School) ஜெசு இன்டெர்வெல்லில் கபடி விளையாடுவான்.  காலைத் தூக்கி தூக்கி உதைப்பான்.  அவன் ஒரு போதும் அவுட்டாக மாட்டான் அவனுக்கு ஏனோ கெய்க்வாட் என்று பட்டப்பயர் கபடியில் சூட்டினார்கள்.  கிர்க்கெட்டுக்கும் கபடிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஆர்.எஸ்.எஸ் இல் உதைக்கக் கூடாது என்று ரூல் இருந்தபடியால் அவனால் சோபிக்க முடியவில்ல.

உதைக்கக் கூடாது என்ற ரூலையும் மீறியவன் பெரியண்ணன்.  அவன் தெருக் கடைசியில் உள்ளக் குடிசைப் பகுதியில் குடியிருப்பவன்.  கபடி விளையாட்டின் ஆசைக் காரணமாக, தவிர எங்களையெல்லாம் ஈசியாகத் தோற்கடிக்க முடியும் என்ற நினைப்பின் காரணத்தினாலும் அவன் ஆர்.எஸ்.எஸ் இல் சேர்ந்தான்.  சேர்ந்த முதல் நாளே கபடி உண்டா ஜீ என்று கேட்டுக் கொண்டிருந்தான்.  ஜீயும் கடைசியில் உண்டென்றார்.  கணவிபாக் (இரண்டாக வரிசைப் படுத்துதல்) என்றவுடன் நாங்கள் ஏக் தோ ஏக் தோ என்று சொல்ல வேண்டும்.  ஏக் சொன்னவனெல்லாம் ஒரு டீம், தோ சொன்னவனெல்லாம் மற்ற டீம்.  எங்கள் தெரு அல்லமல்  ஸ்ரீரங்கத்திலிருந்து கொஞ்சம் பேர் வருவார்கள்.  நாங்கள் நண்பர்கள் ஒருவர் விட்டு ஒருவர் வரிசையில் நிற்போம், டீமில் விளையாடுவதற்காக.  இந்த technique ஐ நாங்கள் ஆர்.எஸ்.எஸ். இல் இருக்கும் வரைக் கடைப் பிடித்தோம்.  கடைசி வரை நாங்கள் ஆர்.எஸ்.எஸ் ஐ விட்டு விலகும் வரை ஒரு ஜீ யும் இதக் கண்டு பிடிக்கவில்லை.

வழக்கம் போல் நாங்கள் ஒரு டீம், பெரியண்ணன் எதிர் டீம்,ஜீமுவுடன்.  ஆகையால் காலைப் பிடிக்கும் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன்.  பெரியண்ணன் கபடி பாடி வந்தான்.  கோட்டில் காலை வைக்கும் போது லபக்கென்று பிடித்து விடலாம் என்று நினைத்துக் குனிந்தேன். எதிர்பாராத விதமாக பெரியண்ணன் அவன் காலால் என் நெஞ்சில் ஒரு உதை விட்டான்.  நான் நிலைகுலைந்து பின்னால் சரிந்து விழுந்தேன். 

ஜீ, பெரியண்ணன் கபடியில் உதைக்கக் கூடாது என்றார்.  அவன் சிரித்துக் கொண்டே சரி ஜீ என்றான்.

அவன் சிரித்ததை எங்களால் பொறுக்க முடியவில்ல.  குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பாலாவால், அதுவும் பெரியண்ணன் என்னை உதைத்த காரணத்தால்.

அடுத்த முறையும் பெரியண்ணன் கபடி பாடி வந்தான்.  இம்முறை நான் ஜாக்ரதையாகக் குனியவில்ல.  அவன் சிரித்தபடி கபடி கபடி பாடினான்.  அப்புறம் என்ன நடந்தது என்று அவனால் நிர்ணியக்க முடியவில்ல.  வலது புறமாக ஓடி வந்த பாலா பெரியண்ணனை மாடு போல் முட்டி ஒரே செந்தூக்காகத் தூக்கி விட்டான்.  அலறியடித்துக் கொண்டு பெரியண்ணன் கீழே விழுந்தான்.  ஷாக்கா முடியும் நேரம் நமஸ்தே சதா வத்சலே பாடி முடிப்போம்.  அதற்குக் கூட பெரியண்ணன் எழுந்திரிக்கவில்லை.  அன்று முழுக்கு போட்டவன் தான் ஷாக்காவிற்கு, அப்புறம் வரவேயில்லை.  அன்று தான் என்னக்கு பாலாவின் நட்பு புரிந்தது.

Chessக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு எங்கள் நட்பு வட்டாரத்தில் இல்லை, மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டானபடியால்.  ஸ்ரீகாந்த் மற்றும் ஜானா தான் விளையாடுவார்கள்.  ஆட்டத்தில் இருவரும் சரிசமம்.  வி.வி. ஸ்ரீனிவாஸ் (ஜெசுவின் க்ளாஸ் மேட்) chess விளையாடுவான். எப்போதும் ஜானாவுடன் தான் மோதுவான்.  ஸ்ரீதர், ஆர்.சுரேஷ், சங்கரன், ஜானா வசிக்கும் காம்பௌண்டின் வெளியே வாசலை ஒட்டி ஒரு கருங்கல் மூன்று அட்டியில் இருக்கும். Chess போர்ட்டை நடுவில் வைத்து இருவர் விளையாடத் தோதாக இருக்கும்.  அந்த இடத்தில் தான் ஜானாவும் ஸ்ரீனிவாஸும் மோதுவார்கள்.  எப்போதும் ஸ்ரீனிவாஸ் தோத்துப் போவான்.

          15 ஆவது மூவில் ஒரு மிஸ்டேக் செய்து விட்டேன், இல்லாவிட்டால் ஜெயித்திருப்பேன் – இது ஸ்ரீனிவாஸின் வசனம்.

          தினமும் 15 என்பது 10, 20 என்று மாறிக் கொண்டிருக்கும், ஆனாலும் ஒரு போதும் அவன் ஜானாவை ஜெயித்ததில்லை. 

          சில நாட்கள் பாதி ஆட்டத்தில் Chess கலைக்கப்படும் க்ரிக்கெட்டுக்காக.  Chessஉம் காலேஜ் நாட்களுடன் நின்றது.

          ஒரு முக்கியமான spectator க்ரிக்கெட்டுக்கும் Chessக்கும்  என்றால் அது T.நாராயணன்.  Polio attackஇல் கால்கள் சூம்பியதால் அவனால் எந்த விளையாட்டும் விளையாட முடியாது.  ஆனால் அவனுக்கு பிடித்த விளையாட்டுககள் க்ரிக்கெட் மற்றும் Chess.  அவனும் சமயங்களில் Chess விளையாடுவான்.  சைக்கிளில் ஸ்ரீரங்கத்திலிருந்து தினமும் வந்து விடுவான் க்ரிக்கெட்டை ரசிப்பதற்காக. 

தொடரும்…

2 Replies to “நேதாஜி ரோட் நினைவுகள் – XXIII – விளையாட்டுக்கள்

  1. கிட்டிப்புள், பம்பரம், கோலிகுண்டு, தாயக்கட்டை, பல்லாங்குழி, பாண்டி, பரமபதம்… தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் நாம் கொடுத்த விலைகளில் சில. இதில் எதையாவது நாம் பெற்ற செல்வங்கள் விளையாடி இருப்பார்களா?

    Nice to reminisce on all these…

    நாம் பச்சை குதிரையும் தாண்டியதாக ஓர் ஞாபகம்

  2. டயர் வண்டி, குச்சி, கும்மாங்குத்து, ஏழு கல் பேந்தா..
    தொடரட்டும்.
    அருமை

Leave a Reply to Srikanth Gopalan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)