முத்ராவுடன் மார்கழி முன்னோட்டம்

Mudra - Infosys Hall

பொதுவாகவே கர்நாடக சங்கீதத்தில் இரட்டையர் கச்சேரி என்பது முழுமையான இரட்டையர் சங்கீதமாக இருப்பதில்லை. உடன்பிறந்த இருவர் ஒரே மேடையில் தனித்தனியாக கச்சேரி செய்வது போலத்தான் இருக்கும் – குறைந்தபட்சம் மனோதர்மம் சார்ந்த பகுதிகளில். ஒருவர் ஒரு பாடலுக்கு ராக ஆலாபனை செய்வார். இரண்டாமவர் மற்றொரு பாடலுக்கு ராக ஆலாபனை செய்வார். ஸ்வரம் பாடும் போது ஒருவர் முதலில் ஸ்வரம் பாட, அதைத் தொடர்ந்து இரண்டாமவர் ஸ்வரம் பாடுவார். இருவரும் சேர்ந்து பாடல்களைப் பாடுவார்கள். அவ்வளவுதான் இரட்டையர் கச்சேரி என்பது. இரண்டு ஒருவர் சேர்ந்து ஒரே மேடையில் செய்யும் கச்சேரியாகவே இன்றளவிலும் இருந்து வருகிறது. ரஞ்சனி முதல் பாடலுக்கு ராக ஆலாபனையும் முத்தாய்ப்பு ஸ்வரமும் பாடுவார். காயத்ரி இன்னொரு ராகத்துக்கு அதையே செய்வார். இருவரும் சேர்ந்து பாடும் ஆலாபனை கூட முதல் 5 நிமிடம் ஒருவர் இரண்டாவது 5 நிமிடம் ஒருவர் என்பதாகத்தான் இருக்கும்.

Innovation Friendly Trichur brothers

பிருந்தா முக்தா, ஆலத்தூர் சகோதரர்கள் தொடங்கி இன்றைய அனாஹிதா அபூர்வா சகோதரிகள் வரை எல்லோருமே அப்படித்தான். என்னளவில் இரட்டையர் கச்சேரி என்பது இரண்டு ஒற்றை கச்சேரிகளின் சங்கமம். அவை அவ்வாறு இல்லாமல் இருந்தால் சந்தோஷம் தான். ஆனால் கர்நாடக சங்கீத சூழலில் அதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை.

இந்தச் சூழலில் திருச்சூர் இரட்டையர்கள் தென்றலாக ஏழெட்டு வருடம் முன்னால் பவனி வந்தார்கள். இருவருக்குமே ஃப்யூஷன் சங்கீதத்தில் ஆர்வம் அதிகம். அவர்கள் ஆலாபனையில் ஹார்மனி முயற்சி தூக்கலாக இருக்கும். ஒருவர் ஆலாபனை செய்ய இரண்டாமவர் வேறு ஒரு ஸ்வரத்தை பிடிக்க வயலின் வித்வான் மூன்றாவது ஸ்வரத்தை பிடிப்பார். கேட்பதற்கு வித்தியாசமாகவும் ரம்யமாகவும் இருக்கும். ஒருவகையில் அது கர்நாடக சங்கீதத்தில் ஹார்மனி முயற்சி.

ஆசாரமான கர்நாடக சங்கீத சூழலில் ரசிகர்களிடம் தாராள மனப்பான்மையை எதிர்பார்க்க முடியாது. கர்நாடகம் என்றாலே பழமை. பழமையில் தோய்ந்து ஊறி இருக்கும் ரசிகர்கள் மத்தியில் ஹார்மனி முயற்சிகளில் எடுபடாமல் போனதில் வியப்பில்லை. பயன் அற்ற சத்தம் என்பதாக சில விமரிசனங்கள் எழுந்ததன. இப்போதெல்லாம் திருச்சூர் சகோதரர்கள் ஹார்மனி முயற்சியை முழுவதுமாக கைவிட்டுவிட்டார்கள். ஆனால் ராக ஆலாபனை செய்யும் விதம் அப்படியே இருக்கிறது. ஒரு ராகத்தை இருவரும் ஏழெட்டு முறை மாறி மாறி பாடுவார்கள். இவ்வகை ராக ஆலாபனை என்னளவில் ஒரு புத்துணர்ச்சி தரும் விஷயம். அதனாலேயே கூடுமானவரை திருச்சூர் சகோதரர்கள் கச்சேரியை தவற விடுவதில்லை. அவர்கள் முழு நேர கச்சேரிகளும் அதிக அளவில் வலை தளத்தில் கிடைப்பதில்லை. முத்ரா இசை விழாவில் இரண்டாம் நாள் பாடினார்கள். முத்ரா கச்சேரிகளில் ஒரு சௌகரியம். ஆறு மணிக்கு ஆபீஸில் இருந்து கிளம்பி ஆறே கால் மணி கச்சேரிக்கு சரியான நேரத்தில் சென்று விட முடியும். மியூசிக் அகாடமி கச்சேரிகளில் ராகம் தானம் பல்லவி கண்டிப்பாக இருக்கும். இங்கு ஒரு சில கச்சேரிகளில் இருக்கும். சில கச்சேரிகளில் இருக்காது. இது என்னளவில் ஒரு அசவுகரியம்.

அன்று கச்சேரி ஆரம்பித்ததிலிருந்து வர்ணம், ரீதிகௌளை, பவப்பிரியா, என்று ஏதேதோ பாடிக் கொண்டிருந்தார்கள். இன்னும் இரண்டு மூன்று ராகங்கள் அவை என்ன என்று எனக்கு மறந்து விட்டது. நான் குறிப்பெடுத்துக் கொள்வதில்லை. விமரிசனம் எழுதுவதாக இருந்தால் குறிப்பெடுத்துக் கொள்ளலாம். இது விமரிசனம் இல்லை. கச்சேரி கேட்பதால் எனக்கு ஏற்படும் பாதிப்புகளின் பதிவு. அவ்வளவுதான். கச்சேரியில் இருந்து வந்த உடனேயே பாதி உருப்படிகள் மறந்துவிடும். நம்மை பாதித்த வையே  நினைவில் இருக்கும். முப்பது வருடங்களுக்கும் மேலாக இத்தனை கச்சேரிகள் கேட்டதில் நம்மை பாதித்தவை எவை என்று கண்களை இடுக்கி நெற்றியைச் சுருக்கி யோசித்தோம்  என்றால் நமக்கு கிடைக்கக் கூடியவை இரண்டு ஐந்து விரல்களில்  அடங்கிவிடும். எண்பதுகளில் ஸ்ரீரங்கம் வடக்குச் சித்திரை வீதியில் லால்குடி வாசித்த யாரோ இவர் யாரோ, சென்னை வாணி மஹாலில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய ரேவதி ராகம் தானம் பல்லவி (பல்லவி கூட இன்றும் நினைவில் இருக்கிறது பூர்வாங்கம் மாதங்கி காவு மா உமா மா என்று ஆரம்பிக்கும்), கிருஷ்ண கான சபாவில் சஞ்சய் பாடிய ஹேமவதி, சேஷகோபாலன் பாடிய பைரவி இப்படி பத்து பதினைந்து உருப்படிகள் தேறலாம்.

முதல் ஒன்றேகால் மணி நேரத்தில் ஏழெட்டு கீர்த்தனைகள் எதற்கும் விரிவான ஆலாபனை இல்லை. நிரவல் இல்லை. டெஸ்ட் மேட்ச் பார்க்க வந்துவிட்டு டி20 பார்த்தது போல் இருந்தது அதன் பிறகு பைரவி ராக ஆலாபனை தொடங்கியது திருச்சூர் சகோதரர்கள் பாணி ஆலாபனை. பைரவியில் ராகம் தானம் பல்லவி. ராகமாலிகை ஸ்வரம் பாடுகையில் அண்ணன் முதலில் மூன்று ராகங்களைக் கையாண்டார். அடுத்து வந்த தம்பி அண்ணன் பாடிய மூன்றாவது ராகத்தையும் சேர்த்து மூன்று ராகங்கள். வயலின் வித்துவான் தம்பி பாடிய கடைசி ராகத்தையும் சேர்த்து மூன்று ராகங்கள். இவ்வாறு ஒரு சுற்றுக்கு ஏழு ராகங்கள். புத்துணர்வூட்டும் ராகம் தானம் பல்லவி, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்தது. அற்புதமான பல்லவி. இந்தப் பல்லவியை என் கல்லறைக்கு எடுத்துச் செல்வேன் என்று தோன்றவில்லை. இருந்தாலும் சில காலம் நினைவில் இருக்கும்.

இப்போதெல்லாம் கன ராகங்களில் பல்லவி அரிதாகிவிட்டது. சங்கராபரணம் யதுகுலகாம்போதி போன்ற ராகங்களில், ராகம் தானம் பல்லவி பாடக் கேட்டால் ஒருவித பரவசம் ஏற்படுகிறது. சமீபத்தில் TNS கிருஷ்ணா கல்யாணி ராகம் தானம் பல்லவி மிக விஸ்தாரமாக செய்தார். டி என் எஸ் கிருஷ்ணன் எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் ஒருவர் இந்த மார்கழி சீசன் முழுவதுமே அவருக்கு கச்சேரிகளை இல்லை. ஏன் என்று தெரியவில்லை. அவர் எம்பிஏ படித்த கம்பெனி மேனேஜர் என்பதாலோ என்னவோ, அதிகம் கச்சேரிகள் பாடுவதில்லை. இசையை அவர், முழு நேர தொழிலாக கொள்ளவில்லை. அதனால் கச்சேரி இல்லை என்று இல்லாமல் இருந்தால் சரி. அவரது நான்கு மணி நேர கச்சேரியை கேட்டவண்ணம் திருச்சியிலிருந்து கார் ஓட்டி வந்த அனுபவத்தை இந்தப் பக்கங்களில் பகிர்ந்துள்ளேன்.

மறுநாள் அனாஹிதா அபூர்வா  சகோதரிகளின் கச்சேரி. சகோதரிகளுடன் என் பரிச்சயம் எதேச்சையாக யூடியூபில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 3 வருடம் முன்னால் ஒரு டிசம்பரில் யூடியூபில் கேட்டபோது அவர்கள் சங்கீதத்தில் ஒருவகை ஈர்ப்பு சக்தி இருந்தது. அதே வருடம் மார்கழியில் ஒரு மத்தியான கச்சேரி கேட்க என் நண்பனுடன் சென்றிருந்தேன். யூடியூபில் கேட்ட அதே வசீகரம். அதே ஈர்ப்பு சக்தி.

Anahita and Apoorva in last music season

முத்ரா வருடா வருடம் கச்சேரி போட்டி வைத்து அதில் மூத்த கலைஞர்களுக்கான கச்சேரி நேரத்தில் ஒரு கச்சேரி ஒதுக்குவார்கள். இந்தப் போட்டியில் 2018ல் அனாஹிதா அபூர்வா சகோதரிகள் வென்றார்கள். 2018ல் ஆறே கால் மணி கச்சேரி செய்தார்கள். 2019ல் அவர்களுக்கு மறுபடியும் ஆறே கால் மணி கச்சேரி என்று கச்சேரி அட்டவணையில் பார்த்தது ஒரு இன்ப அதிர்ச்சி. என்னைப் போலவே முத்ரா பாஸ்கருக்கும் அவர்கள் இசையில் ஒரு வசீகரம் உண்டு போலும்.

அன்றும் அவர்கள் கச்சேரி மிக நன்றாக இருந்தது. நீதிமதியும் சங்கராபரணமும் பிரதான ராகங்கள். ஜெயமனோகரியில் ராகம் தானம் பல்லவி. இவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அக்கா நிறைய பேசுகிறார். பேச்சை சற்று குறைத்துக் கொள்ளலாம். ஊத்துக்காடு வேங்கட கவியின் இப்படியும் ஒரு பிள்ளை பாடலுக்கு முன்னால் ஒரு விரிவுரை, ஜெய மனோகரி, நாட்டை, கமலா மனோகரி போன்ற ராகங்களின் இடையே உள்ள வித்தியாசம் பற்றிய ஒரு விளக்க உரை,  பல்லவி பற்றி ஒரு பேருரை எல்லாம் நிகழ்ந்தன. அவர்கள் குரு ரவிக்கிரன் இடமிருந்து  இதை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ரவிக்கிரன் உயரம் மிக அதிகம். இந்தக் கச்சேரியில் இருந்து விவாதிக்க, அசைபோட எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. அவருடைய பேச்சு அதன் சுவாரசியத்தை குறைத்து விட்டது. உள்ளங்கை மூடி இருப்பது தான் எதிர்பார்ப்பை தூண்டும்.

முத்ரா நடத்தும் கச்சேரி போட்டிகளில் வென்ற பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு ஒரு ஆறரை மணி கச்சேரியில் முத்ரா வருடாவருடம் இடம் கொடுக்கும். அவர்கள் ஒரு மூத்த இசைக் கலைஞருக்கு பக்கவாத்தியம் வாசிப்பார்கள். 2019ல் வென்றவர்கள் இவ்வருடம் காயத்ரி கிரீஷுடன் கச்சேரி செய்தார்கள். காயத்ரி கிரீஷ் ஒரு தரமான பாடகி. அன்று கீரவாணி ராகத்தை பிரதானமாக பாடினார். மிருதங்கம் வாசித்த அரவிந்த் ஸ்ரீகாந்த்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பக்க வாத்தியம் வாசித்த எல்லோரிடமிருந்தும் அவர்கள் அபார உழைப்பு வெளிப்பட்டது.

பொதுவாகவே இன்றைய தலைமுறை சங்கீத வித்வான்கள் அசுர சாதகம் செய்கிறார்கள். அவர்களுக்கு வசதிகளும் அதிகம். பலருக்கும் பலநூறு கீர்த்தனைகள் தெரியும். நிறைய ராகங்கள் தெரியும். நேற்றைய மேதைகளின் வீச்சு கூட இந்த அளவு இருந்ததில்லை. முப்பது நாற்பது ராகங்களை முழுவதும் உள் வாங்கி இருப்பார்கள். நூறு நூற்றைம்பது கீர்த்தனைகள் தெரியும். அவற்றையே திரும்பத் திரும்ப பாடி அவர்களுக்கு என ஒரு முத்திரையை பதித்து இருப்பார்கள். அவர்களுக்கென ஒரு பாணி உருவாகி இருக்கும். அவர்களுக்கு ஆழம் அதிகம். அகலம் குறைவு. இதை ஒரு குறையாகச் சொல்லவில்லை. அந்த காலகட்டத்தில் கற்றுக்கொள்வதற்கு காத தூரம் போகவேண்டும். கற்றல் சுலபமில்லை. கற்பித்தலும் ஒரு பாடத்திட்டத்திற்கு உட்பட்டது இல்லை. ஆசான்கள் மனது வைத்தால்தான் இவர்களுக்கு கற்பிப்பார்கள். பழைய ஜாம்பவான்கள் இந்த சூழ்நிலையில் போராடி சிகரம் தொட்டவர்கள். இமயத்தில் கொடியை ஏற்றியவர்கள் ஆயிரக்கணக்கானோர். ஒரு டென்சிங் தான் நினைவுக்கு வருகிறார்.

பழைய ஜாம்பவான்களின் வாழ்ந்த அனுபவம் எல்லாம் மின் அணுக்களாக இந்த இளைஞர்களிடம் இருக்கின்றன. தேவையான சகலமும் இணையதளத்தில் இருக்கின்றன. இவற்றோடு ஒரு குருவின் நேரடி வழிகாட்டலும், அசாத்திய உழைப்பும் சேரும் போது திறமை தானாகவே கை வசப்படுகிறது. இவற்றால் பல இளைஞர்களால் சிறப்பான கச்சேரி செய்ய முடிகிறது. முன்பெல்லாம் நன்றாகப் பாடக் கூடியவர்கள் ஒரு பத்து பேர் என்றால் இன்று 300 பேருக்கு அத்தகைய திறமை இருக்கிறது. அங்கிருந்து உச்சத்தை அடைவது ஒரு சிலருக்கே முடிகிறது. பலருக்கும் முடிவதில்லை.

Srivatsan in Action

அந்த வகையில் உழைப்பும் திறமையும் உள்ள ஒருவர் தான் ஸ்ரீவத்சன். 2019 முத்ரா கச்சேரி போட்டியில் வெற்றி பெற்றவர். அற்புதமான குரல் வளம். முழுத் தொண்டையையும் திறந்து பாடும் சங்கீதம். நல்ல மனோதர்மம். இவரும் ஸ்ரீகாந்தநீ என்ற தியாகராஜ கீர்த்தனை பாடினர். ஸ்ரீகாந்தநீ இந்த சீசனின் மணம் போல் இருக்கிறது. கேட்ட நான்கு கச்சேரிகளில் மூன்றில் ஸ்ரீகாந்தநீ. அன்று அவர் பிரதானமாக வராளி, காம்போதி மற்றும் சண்முகப்பிரியா பாடினார். ஆரம்பம் முதல் கடைசிவரை அவரால் என்னை நாற்காலியில் கட்டிப்போட முடிந்தது. சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்.

2 Replies to “முத்ராவுடன் மார்கழி முன்னோட்டம்

  1. என்ன‌ ஒரு ந‌டை. க‌ச்சேரி போகாம‌லேயே க‌ச்சேரி அனுப‌வ‌ம் கிடைத்து விட்ட‌து. வாழ்க‌ உம் த‌மிழ்ப் புல‌மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *