அருள்மிகு ஆதிலஷ்மி தாயார் சமேத ஸ்ரீ ஆதிமூலப் பெருமாள் திருக்கோவில் alias (ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவில்) வடபழனி. எத்தனை பேர் போயிருக்கிரீர்கள்?
பலருக்கு அப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியாது.வடபழனி முருகன் கோவிலுக்கு அடுத்த கட்டடம். பழமையான சிறிய பெருமாள் கோவில். நுழைவாயில் பூக்கடைகளுக்கு இடையில் புதைந்து கிடப்பதால் கோவிலை தவர விடுவதற்கு முயற்சி தேவை இல்லை. உள்ளே செல்லத்தான் முயற்சி தேவை.
மக்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத கோவில்களுக்கு போவதில் என் மனைவிக்கு அலாதி பிரியம். அவ்வப்போது இம்மாதிரி ஒரு கோவிலுக்கு செல்வோம். கடைசியாக சென்றது, சைதாப்பேட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கட நரசிம்ஹ ஸ்வாமி கோவிலுக்கு. அதிகம் ஆளரவம் அற்ற அந்த கோவிலில் தேவா என்றொரு இளைஞன் அற்புதமாக நாதஸ்வரம் வாசிக்கிறார். அழகான சிறிய கோவில். இருள் கௌவாத சந்தி. மாலை நேரக் கடல் காற்றில் கலந்துவரும் சுருதி சுத்தமான நாதஸ்வரம். புராதன கோவில்களுக்கே உரித்தான சத்தச் சூழல். அவசியம் சைதாப்பேட்டை சென்று வாருங்கள். தெய்வீகத்தை உணர்வீர்கள்.
வடபழனி பெருமாள் கோவிலுக்குள்ளும் நாதஸ்வரம் கேட்டது. சேர்ந்தாற்போல் ஐந்து நொடிகள் கூட அபஸ்வரம் இல்லாமல் இல்லை. வடபழனி பூக்கடைகளுக்கு உள்ளே புதைந்து கிடந்தது கோவிலின் பின் வாயில். முன் வாயில் ஒரு தெருவின் முடிவில் இருக்கிறது. அதன் இரு பக்கமும் அக்கிரஹார வீடுகள். இந்தக் கோவிலும் இந்து அறநிலையத் துறையால் பராமரிக்கப் படுகிறது. தொல்பொருள் கணக்கெடுப்பு மற்றும் பராமரிப்புத் துறையின் நீல போர்டில் வெள்ளை எழுத்து எங்குமே தென்படவில்லை. கோவில் சற்றே பழமையானது தான். ஆனால் தொன்மையானது அல்ல போலும்.

கோவில் முன் வாயிலுக்கு நாங்கள் சென்ற போது, ராமானுஜரின் புறப்பாடு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. வைணவக் கோவில்களுக்கே உரிய சந்தை கோஷ்டியும் பாசுரம் சொல்ல ஆரம்பித்தனர். ஆரம்பம் ராமானுஜர் நூற்றந்தாதியிலிருந்து.
“பொன்னரங்கம் என்னில் மயிலே பெருகும் இராமானுசன்
இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில்
புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசன்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே
அண்ணல் இராமானுசன்”
ஒரே நூற்றந்தாதியோடு நிருத்திக்கொண்டு பிரபந்தம் தொடங்கியது. ராமானுஜர் புறப்பாட்டுக்கான ஆயத்தம் ஆரம்பம் ஆனது. சட்டை போடாத மனிதர் உரத்த குரலில் ‘எச்சரிக்கை… எச்சரிக்கை’ என்று இரு முறை குரல் கொடுத்தார். என் இதழோரத்தில் லேசான புன்முறுவல். ஏழெட்டு வயதில் அப்பா பெல்டை தரையில் அடித்து ‘ச்சேரிக்க… ச்சேரிக்க’, என்று கத்திக்கொண்டு ஸ்ரீரங்கம் வீட்டை வலம் வந்து விளையாடியது ஏனோ நினைவுக்கு வந்ததது.
சென்னையை சுற்றி உள்ள பெருமாள் கோவில்களில் ராமானுஜர் அருளிய ஸ்ரீரங்கம் கோவில் பததி தான் கடைபிடிக்கப் படுகிறதோ எனத் தோன்றுகிறது. நெடு நாளாகவே தோன்றிக் கொண்டு இருக்கிறது. உறுதி செய்துகொள்ள அதிக முயற்சி தேவை இல்லை. அரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள கோவிலில் விசாரிக்க பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்குமா? நுனிப் புல் மேய்வது சுகமாகத் தான் இருக்கிறது.
நாதஸ்வரத்தில் மணி அய்யரின் இங்கிலீஷ் நோட்ஸ்ஸின் அபசுரங்களுக்கிடையே ராமானுஜர் வையாளி நடையில் ஊஞ்சலில் அமர புறப்பட்டுப் போனார். நாங்கள் சன்னதிக்குள் நுழைந்தோம். கூட்டம் அதிகம் அற்ற திருக்கோவில் என்றாலும் சிறிது காத்திருக்க நேர்ந்தது. ஒரு குடும்பம் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தது. சன்னதியை மறைத்து நின்ற குடும்பத்தின் பெரியவர் ஒரே தட்டை வைத்துக்கொண்டு பத்து பதினைந்து பேருக்கு சங்கல்பம் செய்து வைத்துக் கொண்டிருந்தார். மூன்று வேறு வேறு கோத்திரங்கள் காதில் விழுந்தது. பிரகாரத்தில் என் மனைவி, ‘அவாளுக்கு ரெண்டு கல்யாணமான பெண்கள்’, என்றாள்.
பிரகாரத்தில் தளம் ஆங்காங்கே உடைந்த்திருந்தது. கோவிலுக்கு திருப்பணியின் தேவை நிறையவே இருந்தது. கோவிலை விட்டு கிளம்பும் போது ராமானுஜர் உலா நிறைவடைந்து கொண்டிருந்தது. யாரோ ஒருவர் “ஆரத்தி பாட யாரும் இல்ல. நீயே வாசி”, என்று நாதஸ்வர வித்வானிடம் சொல்லிக் கொண்டிருந்தார். குறிஞ்சியில் குறிஞ்சியை தேடும் கொடுப்பினை இல்லை.

“முருகன் கோவிலுக்கு போகலாம்”.
இறுதியையும் உறுதியையும் வெளிப்படுத்தும் வார்த்தைகள். பேச்சு வார்த்தைக்கு இடமே இல்லை. என் கவலை எனக்கு. ட்ரீம்11 இல் டீம் போட்டு இருக்கிறேன். நான் போட்டவர்கள் டீமில் ஆடாவிட்டால்?
என் கேப்டனே ஆடாவிட்டால்? “சரி. போகலாம் வா”. மணி ஏழு இருபது. இருபது இருபத்தைந்து நிமிடங்களில் வெளியில் வரவேண்டும். மாலும் மருகனும் கை விட மாட்டார்கள்.
கோவில் உள்ளே நுழைந்த உடனே வித்தியாசம் முகத்தில் அறைந்தது. எங்கும் எதிலும் சுபிட்சம். மிக நன்றாக பராமரிக்கப் பட்ட கோவில். வழவழப்பான செங்கல் நிற கிரானைட் தரை. இடை இடையே நடைபாதை பிளாக்கர்கள். தேவைக்கு அதிகமாக ஒளியூட்டப்பட்ட சூழல், வண்ணமயமான தூண்கள்.. சகலமும் துடிப்பையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் விதமாக… கோவிலின் பிரதான தெய்வம் போல.
இது என்னுடைய பிரச்சனையா என்று தெரியவில்லை. என்னை பொறுத்த வரை தமிழ்நாட்டு கோவில்களில் வழுவழுப்பான கிரானைட் தரைகள் ஆறாம் விரல் போல துருத்திக்கொண்டு இருக்கின்றன. என் வாழ்நாளில் ஸ்ரீரங்கம் கோவிலிலோ, திருவானைக்காவலிலோ வரவில்லை என்றால், நான் அதிருஷ்டசாலி. பொதுவாகவே கோவில்களில் தொழில்நுட்ப வளர்ச்சியின் அதீத பயன்பாடு மனதுக்கு ஆறுதல் அளிப்பதில்லை.
வள்ளி மணாளன் யாருடைய வேண்டுதலுக்கோ செவி சாய்த்திருக்க வேண்டும். ஒரு குடும்பமே தங்கத் தேர் இழுத்துக் கொண்டிருந்தது. முதல் பிரதட்சணத்தில் சிறு சிறு சன்னதிகளில் எங்கள் வருகையை பதிவீடு செய்தோம். வடகலை ஐயங்கார் இரண்டு பிரதக்ஷனம் செய்தாக வேண்டுமே!
மணி ஏழு நாற்பது. டீம் போட்டிருப்பார்கள். என் மனைவி ஒரு வரிசையில் நின்றாள். முருகனை பிறகு ஒரு நாள் சந்திக்கும் என் எண்ணம் தவிடுபொடியானது. வரிசை நல்ல வேளையாக அவசர கதியில் முன்னேறியது. தர்ம தரிசன வரிசையில் தூரத்திலிருந்து தரிசிக்க ஏதுவாக நீளமான மர நடைமேடையில் நடந்து சன்னதியிலிருந்து வெளியில் வந்தோம். நேர்த்திக் கடன் முடித்த குடும்பம் கண்ணில் தென்பட்டது. கோவில் சிப்பந்திகள் தேரை யதா ஸ்தானத்துக்கு இழுத்துச் சென்றனர்.
வெளியில் வரும்போது மணி ஏழு ஐம்பது. ஆதிமூலப் பெருமாளும் வடபழனி முருகனும் என்னை ஏமாற்றவில்லை. ட்ரீம்11 டீமில் இல்லாதவர்களை மாற்றி விட்டேன். ஆனால் அருள் பாலிக்கவில்லை. என் அணி தோற்று விட்டது. நஷ்டம் நாற்பத்தொன்பது ரூபாய்.
பின் குறிப்பு: வன்மமும் கசப்பும் துளியும் இல்லாமல் எப்போதுமே சந்தோஷமாக வாழ்க்கையை சந்திப்பது, வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அடைகாக்காமல் மரணத்தை எதிர்கொள்ள விரும்புவது – இவை இரண்டும் என் வாழ்க்கை தத்துவத்தின் ஆதார சுருதியாக இருப்பதாகவே நினைக்கிறேன். நாதஸ்வரம் பற்றி எழுதியது அக்கலைஞரை கிண்டல் செய்யும் நோக்கத்தில் அல்ல. கோவில் சார்ந்த ஓர் அற்புதமான கலையின் இன்றைய க்ஷீன நிலையை சுட்டிக்காட்டவே. பரிவாதினி இந்த நிலமையை மாற்ற கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அது பற்றி பிரிதொரு சமயம்.
முழுசா படிக்காம எஃ பி ல பதில் போட்டுட்டேனோ….
…
தெய்வ குத்தம் ஆகாம இருக்கணும்….
இன்னும் 3 மேச் இருக்கு.
யார் அனுக்ரஹம் பண்ணினா என்ன.
டீம் ஜெயிச்சா சரி